Tuesday 7th of May 2024 04:35:24 PM GMT

LANGUAGE - TAMIL
-
நல்லாட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீதி அபிவிருத்திப் பணிக்களை தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உரிமை கோர முடியாது - ஞா.ஸ்ரீநேசன்

நல்லாட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீதி அபிவிருத்திப் பணிக்களை தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உரிமை கோர முடியாது - ஞா.ஸ்ரீநேசன்


ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையில் கடந்த நல்லாட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண சபையினால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி (I-Project) திட்டத்தினை தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உரிமை கோர முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மண்முனை மேற்கு பிரதேசத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி (I-Project) திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கான மகிழவட்டவான்-ஆயித்தியமலை,மகிழவட்டவான்-கரவெட்டி வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையில் இலங்கையில் உள்ள மாகாண சபைகளின் ஊடாக 2017இல் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது.

இருந்தபோதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவை ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள், செயலாளர்களுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளை அடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2018ம் ஆண்டில் ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்ட வேளை, அதனை தொடர்ந்து வந்த ஒக்டோபர் சதி புரட்சி, ஒப்பந்ததாரர் தெரிவுகளின் போது இடம்பெற்ற தாமதங்கள் காரணமாக இழுத்தடிக்கப்பட்டு தற்போது இவ் வீதிகளின் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட வேலைகளை, தாமே முன்மொழிந்து கொண்டுவந்ததாக தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உரிமை கோரி வருகின்றார்கள். இதனை உரிமை கோரும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை.

அத்துடன் பாரிய வேலைத்திட்டமாக, பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்வதென ஏற்கனவே திட்டமிடப்பட்டு அமுல்படுத்தலுக்காக இருந்தமையால் தான் நாங்கள் எமது தனிப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் மூலமாக பகுதி பகுதியாக இவ் வீதிகளை செப்பனிட முயற்சிக்கவில்லை எனவும் கருத்து தெரிவித்ததுடன் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள் ஆறு வீதிகளை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்ட போதும் ஆயித்தியமலை - மகிழவெட்டுவான் வீதி , கரவெட்டி-மகிழவெட்டுவான் வீதி தவிர்ந்த ஏனைய பாவக்கொடி சேனை வீதி, புது மண்டபத்தடி வீதி, பன்சேனை வீதி மற்றும் சொறுவாமுனை வீதி ஆகிய நான்கு வீதிகளின் பணிகள் இன்னும் ஆரம்பிக்கபடவில்லை எனவும் அதனையும் விரைவாக செய்து முடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE